×

ஜேஎன்யு பல்கலை வன்முறை எதிரொலி மாணவர்களுடன் பேச்சு நடத்த கவர்னருக்கு அமித்ஷா உத்தரவு

* பல்கலையில் போலீசார் கொடி அணிவகுப்பு
* அடையாளம் தெரியாத நபர்கள் மீது எப்ஐஆர்

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கவர்னருக்கு அமித்ஷா உத்தரவிட்டார். டெல்லி ஜேஎன்யுவில் நேற்று முன்தினம் மாலை பல்கலை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்கலை வளாகத்தில் சமீபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டப்பட்டது.  கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பல்கலை வளாகத்தினுள் ஹாக்கி மட்டை, இரும்பு கம்பி, உருட்டு கட்டை போன்றவற்றுடன் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்கினர். இதில் ஜேஎன்யுஎஸ்யு தலைவர் அசிகோஷின் மண்டை உடைந்தது.  என்ன நடக்கிறது என யூகிப்பதற்குள் மர்ம கும்பல் பலரை தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசப்படுத்தினர். இதனால் தலை தப்பினால் போதும் என மாணவர்கள் தெறித்து ஓடினர். பல்கலை வளாகமே கலவர பூமியாக மாறியது. நிலையை உணர்ந்த ஜேஎன்யு நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதற்குள்ளாக மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிசென்றனர். இதையடுத்து பல்கலை வளாகத்தினுள் நுழைந்த டெல்லி போலீசார் அங்கு கொடி அணிவகுப்பு நடத்தினர்.

சுமார் 2 மணிநேரமாக நடந்த இந்த கொலைவெறி தாக்குதலில் சுமார் 34 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்,  ஜேஎன்யு வளாகம் முன் திரண்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். மும்பை, புதுவை, அலிகார், ஐதராபாத், சண்டிகார், பெங்களூரு, புனே, கொல்கத்தா என்று பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தால் ஜேஎன்யு பல்கலை வளாகத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. 700 போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கலவரம் குறித்து அறிந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு,  துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமித்ஷா சம்பவம் குறித்து கேட்டறிந்ததோடு, உடனடியாக ஜேஎன்யு பிரதிநிதிகளை அழைத்து பேசுமாறு உத்தரவிட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட முகமூடி அணிந்த நபர்கள் சிலரை அடையாளம் கண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

‘திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்’


பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவர் அசிகோஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த நான்கைந்து நாட்களாகவே ஆர்எஸ்எஸ் ஆதரவு பேராசிரியர்கள் எங்களுடைய இயக்கத்தை தகர்க்கும் வகையில் வன்முறையை தூண்டிவிட்டு வந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் அதை தடுத்து நிறுத்தவோ, முயற்சிக்கவோ கூட இல்லை. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்’’ என்றார்.

பாஜ, இடதுசாரிகள் ஜாதவ்பூரில் மோதல்

* மேற்குவங்க மாநிலம் ஜாதவ்பூரில் நேற்று ஜேஎன்யு விவகாரம் தொடர்பாக இடதுசாரி அமைப்பினரும், பாஜ தொண்டர்களும் தனித்தனியாக பேரணி நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் இருதரப்பினரும் சந்தித்தபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
* வன்முறை சம்பவத்திற்கு பின் அடையாள அட்டை காண்பித்த பிறகே பல்கலை வளாகத்தினுள் மாணவர்களை போலீசார் அனுமதித்து வருகின்றனர். பாதுகாப்புக்காக வளாகத்தினுள் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிர்வாக அலுவலக கட்டிடம், விடுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
* ஜேஎன்யு வன்முறை தொடர்பாக, கலவரம் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக துணை கமிஷனர் தேவேந்திர ஆர்யா தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
* ஊடகத்துறையினர் உட்பட வெளியாட்கள் யாரும் பல்கலை  வளாகத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.
* ஜேஎன்யு பல்கலையில் நடந்த வன்முறை தொடர்பாக அனைத்து வழக்குகளையும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து போலீசாரும் இந்த வழக்கில் ஆதாரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
* ஜேஎன்யு பல்கலையின் பதிவாளர், துணைவேந்தர் ஆகியோர் ஆளுநர் பைஜாலை சந்தித்து பல்கலை வளாகத்தின் தற்போதைய சூழல் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 35 மாணவர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவ சட்ட வழக்கு (எம்எல்சி) விசாரணை முடிந்துள்ளதாக போலீசார் கூறினர்.
* வன்முறை குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், நேற்று ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து பேசினர். அப்போது மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆசிரியர்களும் கலந்து கொண்டு ஆலோசித்தபோது, மாணவர்கள் தரப்பில் 4 கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அவற்றில் முதலாவதாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, பல்கலை வளாகத்தில் இருந்து போலீசார் வெளியேற வேண்டும் என்கிற கோரிக்கைகளும் அடங்கும். போலீசாரும் ஆவண செய்வதாக கூறிச் சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
* ஜேஎன்யு வன்முறை தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
* அனைத்து மாணவர்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என ஜேஎன்யு பல்கலை துணைவேந்தர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளார்.மேலும், செமஸ்டர் பதிவுகள் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும். எனவே, செயல்முறை குறித்து பயப்படத் தேவையில்லை என கூறியுள்ளார்.

‘ஹிட்லர் ஆட்சியில் நடந்தது இப்போது மீண்டும் நடக்கிறது’

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ெடல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “நான் படித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இப்போது நடந்து வரும் சம்பவங்கள் வருத்தம் தருகிறது. மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. அரசு இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அங்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிகொணர வேண்டும். இந்தியாவின் மதிப்பு சரிந்து கொண்டே இருக்கிறது. இந்தியா மீதான மதிப்பை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது நடந்தது தான் இந்தியாவில் தற்போது நடக்கிறது. அப்போது நாஜி ஆட்சியில் வந்த மாற்றங்கள், சட்டங்கள் இன்று இந்தியாவில் வர தொடங்கியுள்ளது. அதை நாம் அனுமதிக்க கூடாது” என்றார்.

Tags : Amit Shah ,governor ,talks ,university students ,JNU ,hold talks , Amit Shah ,orders governor, talks with JNU university students
× RELATED பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர்...